'கூகுள் மீ' இரகசிய தளம் !


  ' கூகுள் மீ ' என்ற சமூக வலைப்பின்னல் தளமொன்றினை கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம்.

கூகுள் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் தனது மற்றைய சேவைகளான 'ஜீ மெயில்' எனப்படும் மின்னஞ்சல் கணக்கு, கூகுள் பஸ் மற்றும் அதன் மற்றைய வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டும் ' ஸ்லைட் ' மற்றும் ' சிங்கா ' ஆகியவற்றினை உபயோகப்படுத்தியும் தனது சமூக வலைப் பின்னல் தளத்தினை உருவாக்கி வருவதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.

' ஸ்லைட் ' நிறுவனமானது மற்றைய சமூக வலைப்பின்னல் தளங்களான ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு மென் பொருட்களை உருவாக்கிய நிறுவனம்.

இந் நிறுவனத்தை கடந்த 4ஆம் திகதி கூகுள் விலைக்கு வாங்கியது.

மேலும் ' சிங்கா ' எனப்படும் ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு இயங்குதளம் சார்ந்த விளையாட்டுக்களை உருவாக்கிய நிறுவனத்தில் கூகுள் 100 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கூகுளின் இத்தகைய நடவடிக்கைகளானது, பாவனையாளர்களுக்குப் புது வகையான அனுபவத்தினை தரும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இத்தளத்தில் கணினி விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூகுளின் மற்றைய சேவைகளான கூகுள் 'எப்ஸ்', கூகுள் 'வொயிஸ்', கூகுள் 'ரீடர்' மற்றும் 'ஐ' கூகுள் போன்றவற்றின் பாவனையாளர்களைத் தனது கூகுள் 'மீ' தளத்திற்கான இலக்காக கூகுள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் கூகுள் 'பஸ்', 'ஓர்குட்' ஆகிய சமூக வலைபின்னல் தளங்களை உருவாக்கி தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'பேஸ்புக்'கின் பிரமாண்ட வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மற்றைய தளங்களின் எண்ணிக்கை என்பன கூகுளின் இன்னும் அறிவிக்கப்படாத கூகுள் 'மீ' தளத்தின் வெற்றிக்குப் பெரும் சவால்களாக விளங்குகின்றன.

கருத்துகள்