இலங்கை மத்திய வங்கியானது தனது 60 வருட நிறைவை (வைர விழா) எதிர்வரும் 28ஆம் திகதி பூர்த்தி செய்கின்றது.
இதனையொட்டி புதிய ரூபா நோட்டுக்கள், நாணயங்கள் மற்றும் முத்திரை என்பனவற்றை வெளியிடவுள்ளது.
இலங்கை மத்திய வங்கி 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
நிறைவு விழாவில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர சிறப்புரை ஆற்றவுள்ளார்.
மேலும் சர்வதேச ஆய்வு மாநாடும் தெற்கிழக்காசிய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களின் சிறப்பு மாநாடும் நடைபெறவுள்ளன. பல்வேறு மத வழிபாடுகளுடன் கேளிக்கை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேற்படி கொண்டாட்டங்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளன.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி ஊக்குவிப்பு, நிதித் துறையொன்றுக்கான தேவை மற்றும் ஒழுங்கான நாணயக் கொள்கையொன்றின் தேவை என்பனவற்றினை கருத்தில் கொண்டு அரசாங்கம் மத்திய வங்கியை அமைத்தது.
அதற்கு முன்னர் நாட்டின் நிதிசார் செயற்பாடுகள் நாணய சபை முறையினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் 1948ஆம் ஆண்டு இதன் செயற்பாடுகள் போதியவையாக காணப்படவில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை இலங்கையில் நிறுவுவதற்கான நிபுணத்துவத்தை அமெரிக்காவிடம் கோரியிருந்தது. அமெரிக்காவும் பொருளியலாளர் ஜோன் எக்ஸ்டர் என்பவரை இதற்கென நியமித்தது.
இவரின் ஆய்வு அறிக்கை மற்றும் சட்டரீதியிலான ஆலோசனைகளுக்கமைய, 1949 ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டு அதன் செயற்பாடுகள் 1950 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமானது.
இதன்பின் நாட்டின் நிதியோட்டத்தை சீர்படுத்தல், பண பரிமாற்று வீதத்தினை பேணல், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தல், நாட்டின் வளங்களை வினைத்திறனாக பயன்படுத்தல், மற்றும் நாணய வெளியீடு உட்பட பல விடயங்கள் மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்பட்டு வந்தன.
2000 ஆம் ஆண்டின் பின்னர் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையில் அது தன்னை நவீனமயப்படுத்திக்கொண்டது. தன் இரு இலக்குகளைப் பிரதானமாக நிர்ணயித்துக் கொண்டது.
1) பொருளாதார மற்றும் விலை என்பனவற்றின் ஸ்திரத்தன்மையைப் பேணல்
2) நிதியியல் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணல் என்பவையே அவையாகும்.
எது, எவ்வாறாயினும் இலங்கை போன்ற ஒரு வளர்ச்சியடைந்து வரும் நாட்டுக்கு மத்திய வங்கியின் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் அளப்பரியன என்றால் அது மிகையல்ல.
ச.கவிந்தன்
கருத்துகள்
கருத்துரையிடுக