அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தேடல் பொறி நிறுவனமான கூகுள், கணினியிலிருந்து தொலைபேசிக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் (பிசி டூ போன்) சேவையை நேற்று புதன்கிழமை ஆரம்பித்தது.
ஜீ-மெயில் எனப்படும் கூகுளின் மின்னஞ்சல் கணக்கினை பேணுவதன் மூலம், அதனூடாக எந்தவொரு தொலைபேசிக்கும் இந் அழைப்பினை மேற்கொள்ள முடியும். கூகுளின் வொயிஸ் சேவைப் பாவனையாளர்கள் தங்கள் வொயிஸ் கணக்கினை ஜீ-மெயிலுடன் இணைப்பதன் மூலம் இவ்வசதியை பெறமுடியும்.
மேற்படி சேவையானது கூகுளின் ஜீமெயில் மற்றும் கூகுள் வொயிஸ் போன்ற சேவைகளின் கலவையாக கருதப்படுகின்றது.
ஏற்கனவே இச்சேவையை ஸ்கைப் உட்பட பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கான அழைப்புக்கள் மேற்படி சேவை மூலம் 2011 ஜனவரி வரை இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேற்படி சேவைக்காக ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த கட்டணத்தையே கூகுள் அறவிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கென ஜீமெயில் பாவனையாளர்கள் இலவசமாக தமக்கான பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஏற்கனவே இச்சேவையில் பிரபல்யம் பெற்று விளங்கும் ஸ்கைப் நிறுவனம் உலகளாவிய ரீதியில் 560 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
பிரஸ்தாப சேவையானது ஜீ-மெயிலுடன் இணைக்கப்படுவதால் யாஹூ மற்றும் மைக்ரோசொப்ட் மின்னஞ்சல் கணக்குகளுக்குச் சிறந்த போட்டியாகத் திகழும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இணையமூல தொடர்பாடலுக்கான உயர்ரக ஓடியோ மற்றும் வீடியோ மென்பொருட்களை உருவாக்கும் ஜீஐபிஸ் நிறுவனத்தைக் கொள்வனவு செய்ய அண்மையில் கூகுள் மேற்கொண்ட ஒப்பந்தமும் 'கிஸ்மோ5' வை கையகப்படுத்தியமையும் கூகுளின் போட்டியாளர்களை அதிர வைத்துள்ளமையை எவரும் மறுக்க முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக