ஆசியாவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம்!


அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுகமானது 30 வருட உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னர், இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறவும் ஆசியாவின் முக்கியமான பொருளாதார கேந்திர மத்திய நிலையமாக தன்னை தரமுயர்த்த வழிகோலுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தென் கரையோரத்தில் சீனாவின் உதவியுடன் சுமார் 6 பில்லியன் டொலர் முதலீட்டில் மேற்படி துறைமுகமானது அமைக்கப்பட்டு வருகின்றது.

இத்துறைமுகம் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பொது கட்டுமானத் திட்டங்களில் மிகப் பெரியது.

இந்து சமுத்திரத்தினை வருடாந்தம் கடந்து செல்லும் சுமார் 70,000 வரையான கப்பல்களின் மூலம் புதிய வியாபார வாய்ப்புகளைப் பெறமுடியுமென இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இத்துறைமுகத்திற்கான முதல் கப்பல் இவ்வருடம் நவம்பர் மாதம் இங்கு நங்கூரமிடவுள்ளது.

முதற்கட்டமாக வருடாந்தம் 2,500 கப்பல்களை இங்கு தரித்து வைக்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் புவியியல் அமைவிடமே இத்துறைமுக நிர்மாணிப்பில் முக்கிய செல்வாக்கு செலுத்தும் காரணியாக விளங்குவதாகவும், இதன் காரணமாக ஜப்பான், கொரியா, சீனா, மேற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் கப்பல்கள் தேவையான எரிபொருளினை நிரப்பிக் கொள்வதற்காகவும், பழுது பார்த்துக் கொள்வதற்காகவும் இத்துறைமுகத்தைப் பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அரேபிய நாடுகளுக்கான இலங்கையின் 'புராதன பட்டு' ப் பாதையை மீளப் புதுப்பிக்க, இது ஒரு வாய்ப்பாக அமையுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிர்மாணப் பணிக்கான 85% நிதியை சீன அரசும் 15% நிதியை இலங்கை துறைமுக அதிகார சபையும் வழங்குகின்றன.

சீனா ஆரம்பக்கட்ட கடன் தொகையாக 425 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளதுடன் அதன் நிர்மாணப் பணியிளுக்கும் முக்கிய உதவிகளைச் செய்துவருகின்றது.

சீனாவின் இந்நடவடிக்கையானது இந்தியாவினை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஆதிக்கம் தென் ஆசியாவில் அதிகரித்து வருகின்றது.

மேலும் பாகிஸ்தான், பர்மா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் சீனா துறைமுகங்களை நிர்மாணித்து வருகின்றது. இதன்மூலம் இந்தியாவைச் சுற்றிவளைத்து வருகின்றது எனவும் இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலெனவும் இந்தியா கருதுகின்றது.

ஆனாலும் இந்தியாவின் இவ்வெண்ணம் தவறானதெனவும் இது முற்றிலும் வர்த்தக நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டதெனவும் இலங்கை தெரிவிக்கின்றது.

மேற்படி துறைமுகத்தின் நிர்மாணப்பணிகள் சீனாவின் 'சைனீஸ் ஹார்பர் இன்ஜீனீரிங்' மற்றும் 'சீனோஐத்ரோ கோர்ப்பரேசன்' ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும், துறைமுகப் பணிகளில் 50,000 பேர் வரை வேலைவாய்ப்பினைப் பெறமுடியும் என எதிர்ப்பார்ககப்படுகின்றது.

மேலும் இந்தியாவினால் இங்கு நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச விமான நிலையம், 500 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சபாரி பார்க் மற்றும் 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக அமைக்கப்பட்டுவரும் புதிய மைதானம் என்பன இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் வலு சேர்க்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ச.கவிந்தன்

கருத்துகள்