சமூகவலைப் பின்னல்களில் மலேசியருக்கு அதிக நண்பர்கள்


சமூகவலைப் பின்னல் தளங்களில் அதிக நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள் மலேசியர்கள் எனவும் குறைவாகக் கொண்டிருப்பவர்கள் ஜப்பானியர்கள் எனவும் புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

மேலும் ஈ-மெயில் பாவனையானது காலங்கடந்து விட்டதாகவும் அவ்வாய்வு தெரிவிக்கின்றது.

பிரித்தானியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று சுமார் 46 நாடுகளில் 50,000 பேரிடம் மேற்படி ஆய்வினை நடத்தியிருந்தது.

இவ்வாய்வின் முடிவுகளின் படி இணையப் பாவனையாளர்களில் அதிகமானோர் மின்னஞ்சல் பாவனையைவிட 'பேஸ்புக்' மற்றும் 'லிங்டின்' போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் வெகு நேரத்தைச் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் லத்தீன் அமெரிக்கா, மத்தியகிழக்கு, சீனா போன்ற நாடுகளில் சமூக வலைப் பின்னல்கள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ள போதிலும் அங்கே கணிசமானோர் மின்னஞ்சலை உபயோகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியர்கள் சராசரியாக 233 மற்றும் பிரேஸிலியர்கள் 231 நண்பர்களையும் சமூகவலைப் பின்னல் தளங்களில் கொண்டுள்ளனர். ஜப்பானியர்கள் சாராசரியாக 29 நண்பர்களைக் கொண்டுள்ளனர்.

சீனாவில் இணையப் பாவனையாளர்களில் ஐந்தில் ஒருவர் அதாவது 88 % மற்றும் பிரேஸிலியர்களில் 51 % வலைப்பதிவில் எழுதுகின்றனர். இது அமெரிக்காவை விட 32 % அதிகமாகும்.

இது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி ஆகியவற்றின் பாவனை வெகுவாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைத்தொலைபேசிகளின் மூலம் சமூகவலைப் பின்னலை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்