கிழக்கு ஆபிரிக்காவில் பஞ்சம் உக்கிரமடைந்து வருவதாகவும் இதனால் குழந்தைகள் அதிகளவில் உயிரிழந்து வருவதாகவும் ஐ.நா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
உலக நாடுகள் பட்டினிச் சாவை தடுக்க உடனே உதவுமாறும் பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் ஜிபவுடீ ஆகிய நாடுகள் வேகமாக பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சோமாலியாவில் உள்ள தாய்மார் தமது குழந்தைகளுக்கான உணவினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களை வீதிகளில் விட்டுச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் பல குழந்தைகள் போஷாகின்மையால் எழ முடியாமல் இருப்பதாகவும் சில குழந்தைகள் உயிரிழந்து காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஐ.நாவின் உணவு வழங்கும் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றமையே இதற்கான காரணமென அவ்வமைப்பின் உணவுத் திட்டத்திற்கான நிறைவேற்று இயக்குநர் ஜொசெட் சீரன் தெரிவித்துள்ளார்.
பஞ்சம் மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கென்யாவின் தடாப்பிலுள்ள 90,000 பேருக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள அகதி முகாமில் சுமார் 400,000 பேர் தங்கியுள்ளதாக ஐ.நா அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தமக்கு உடனடியாக 360 மில்லியன் அமெரிக்கடொலர் நிதி தேவையென உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவையென ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக