உலகம் பூராகவும் கடந்த 5 வருடங்களில் 72 அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் இணையக் கட்டமைப்புக்கள் ஹெக்கிங் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக இணைய மற்றும் கணனி பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி தெரிவித்துள்ளது.
இணையக் கட்டமைப்புகளின் மீதான இத்தாக்குதல்களின் பின்னணியில் ஒரு நாட்டின் அரசாங்கம் செயற்படுவதாகவும் அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து நடந்துவரும் இந்த ஹெக்கிங் சம்பவங்களில் அந்நாட்டின் ஒற்றர்களே ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாக்குதல்களின் பின்னால் உள்ள நாடு சீனா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஸ்யாவும் அவ்வாறாக இருக்க வாய்ப்புக்கள் உள்ள போதிலும் சீனாவாக இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஐ.நா. சபை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உட்பட பல அமைப்புகள் மற்றும் அமெரிக்கா, தாய்வான, இந்தியா தென்கொரியா, வியட்நாம், கனடா ஆகிய நாடுகளினதும் இணையக் கட்டமைப்பு இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
சீனாவின் பீஜிங் மற்றும் சங்காய் நகரங்களில் இருந்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டிருந்த இன்னொரு நிறுவனமான டெல் செகுயர் வேர்க்ஸ் அறிவித்துள்ளது.
இத்தாக்குதல்கள் குறித்த அமைப்பை மட்டும் மையப்படுத்தி நடத்தப்படவில்லையெனவும் பல்வேறு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளின் இணையத்தளங்கள் ஹெக்கிங் செய்யப்பட்டுள்ளதாக மெக்காஃபி தெரிவித்துள்ளது. எந்த நாடு என வெளிப்படையாக மெக்காஃபி அறிவிக்காத போதிலும் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய ஹெக்கிங் என சுட்டிக் காட்டியுள்ளது.
2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தாக்குதல் 'பிஸ்ஸிங்' என அழைக்கப்படுகின்றது.
'பிஷிங்' (Phishing)
பொதுவாக இவை மின்னஞ்சல்கள் மூலமே நடத்தப்படுகின்றது. வைரஸ்களைக் கொண்ட மின்னஞ்சல்கள் நமது முகவரிக்கு வரும். நாம் அவற்றைத் திறந்து படிக்கும் வேளையில் நமக்கு தெரியாமல் அவை நமது கணனியில் வேறு சில பொருட்களை தரவிறக்கம் செய்துவிடும்.
இதனைத் தொடர்ந்து ஹெக்கர்கள் நமது தகவல்களை இலகுவாகத் திருடிக்கொள்ள ஆரம்பித்துவிடுவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக